தேனியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி முற்றுகை !
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் வங்கிக் கிளையை முற்றுகையிட்டவர்களை போலீசார் இழுத்துச் சென்று கைது செய்தனர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, ஆண்டிபட்டி இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், இழுத்துச் சென்று கைது செய்தனர்.
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளின் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என தமிழக அரசு அறிவித்தது.
அரசு அறிவித்துள்ள விலையுயர்வின்படி கட்டணங்கள் கீழ்கண்டவாறு உயரும்:
புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்வு
மாநகர குளிர்சாதன பேருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்வு
புறநகர் விரைவுப்பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.17 லிருந்து ரூ.24 ஆக உயர்வு!
வால்வோ பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.33லிருந்து ரூ.51 ஆக உயர்வு!
மாநகர, நகர பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3லிருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது!
குளிர்சாதனப்பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.27லிருந்து ரூ.42 ஆக உயர்த்தப்பட்டது
தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்துடன் மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டும் 20% கூடுதலாக வசூலிக்கப்படும்!
சென்னையில் மாநகரப்பேருந்துகளுக்கு இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 அல்ல, ரூ.5
சென்னை மாநகரப் பேருந்தில் அதிகபட்ச கட்டணம் 14 ரூபாயில் இருந்து 23 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….