பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதில் கட்டண உயர்வு : சமூக ஆர்வலர்கள் கண்டனம்
ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமானது. இப்போதுள்ள கால கட்டத்தில் அந்த சான்றிதழ் இல்லாமல் எந்த முக்கிய ஆவணமும் கிடைப்பது கடினம். இது குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனைகளில் பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டு அது மாநகராட்சிக்கு அனுப்பி வைக்கப்படும்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்டவுடன் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்ப படிவம் ரூ.5க்கு வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் முதல் பிரதி பெறுவதற்கு ரூ.10 கட்டணம் செலுத்தினால் போதும். இதையடுத்து ஒவ்வொரு கூடுதல் பிரதி பெறுவதற்கும் தலா ரூ.2 செலுத்த வேண்டும். ஆனால் தற்போது விண்ணப்ப படிவம் பெறுவதற்கு ரூ.5 செலுத்தி படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
சான்றிதழ் பெறுவதற்கு ரூ.300 செலுத்த வேண்டும். பின்னர் ஒவ்வொரு கூடுதல் பிரதி பெறுவதற்கு தலா ரூ.200 செலுத்த வேண்டும். இதே நிலை தான் இறப்பு சான்றிதழ் பெறுவதற்கும். இவ்வாறு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு கட்டணத்தை பல மடங்கு மாநகராட்சி உயர்த்தியிருப்பது ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சதாவெங்கட் கூறியது என்னவென்றால், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு கடந்த காலங்களில் விண்ணப்ப படிவம் தவிர ரூ.10 இருந்தால் போதும். அதற்குமேல் கூடுதல் சான்றிதழ் பெறுவதற்கு ஒவ்வொரு சான்றிதழுக்கும் வெறும் ரூ.2 செலுத்தினால் போதும். இப்போது விண்ணப்ப கட்டணம் தவிர சான்றிதழ் பெற ரூ.300 செலுத்த வேண்டும். கூடுதலாக ஒவ்வொரு சான்றிதழ் பெறுவதற்கும் தலா ரூ.200 செலுத்த வேண்டும். இதுதவிர சான்றிதழ் பெற அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
இதில் பிழைகள் இருந்தால் திருத்தம் செய்வதற்கு பல ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இப்படி ஏழை மக்கள் பெறும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. பிறப்பு, இறப்பை பதிவு செய்ய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்தவுடன் அதை ஆன்லைன் மூலம் ஏற்றிவிட்டால் இந்தியா முழுவதும் இருந்து தங்களது சான்றிதழ்களை எளிதாக டவுன்லோடு செய்து கொள்வர். இதை மாநகராட்சி செய்ய தவறி விட்டு ஏழை மக்கள் மீது சுமையை திணிக்கிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதை திரும்ப பெற வேண்டும் என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, இந்த கட்டண உயர்வு தஞ்சை மாநகராட்சியில் கடந்த 12ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வை தஞ்சை மாநகராட்சி கொண்டு வரவில்லை. சுகாதாரத்துறையின்கீழ் இயங்கும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுத்துறை தான் உயர்த்தியுள்ளது என்றார். பிறப்பு, இறப்பை பதிவு செய்ய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்தவுடன் அதை ஆன்லைன் மூலம் ஏற்றிவிட்டால் இந்தியா முழுவதும் இருந்து சான்றிதழ்களை எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.