ராமேஸ்வரம் மீனவர்களை கற்கள், பாட்டில்களை கொண்டு தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை!
இராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததோடு கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மீனவர்களின் படகில் ஏறி மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். இதனால் படகு ஒன்றுக்கு ரூ.10,000-இல் இருந்து ரூ.15,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.