பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

Default Image

பெரம்பலூர் மாவட்டத்தில் வயலுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பினால் சித்தளியை சேர்ந்த ராஜா, ஓதியத்தை சேர்ந்த செல்வம், பசும்பலூரை சேர்ந்த அர்ஜூனன், கூத்தூர் ராமலிங்கம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் அருங்கால் கல்லக்குடியை சேர்ந்த ராமன், சேலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோர் இறந்திருப்பதாகவும், அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு பரவலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பஸ்நிலையம் காந்தி சிலை அருகே பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மக்கள் உரிமை கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் அசன் முகமது தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், முன்னாள் தலைவர் வேணுகோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வீரியமிக்க பூச்சிக்கொல்லிகளை தடை செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லி யால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருத்தி விளைச்சல்-பூச்சிக்கொல்லி தாக்கம் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதிகப்படியாக பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி மண்ணின் தரத்தை சீர்குலைக்கும் பி.டி. ரக பருத்திக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது “மண்ணின் விதைகள் இருக்கு, மரபணுமாற்ற விதை எதற்கு” என்பன உள்ளிட்ட கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைசெயலாளர் ராஜேந்திரன், திருவள்ளுவர் உழவர் மன்ற தலைவர் வரதராஜன் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராசு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர்சித்திக் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், இதர அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ரமேசு கருப்பையா நன்றி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்