நீலகிரி அருகே தேரோட்டத்தை போலீசார் நிறுத்தியதால் பரபரப்பு!
ஊட்டி சிறுவர் மன்றம் அருகே அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 16–ந் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உஷ பூஜை, சீவேலி, பஞ்ச கவ்வியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ‘சாமியே சரணம் அய்யப்பா‘ என்ற கோஷத்துடன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமச்சந்திரன் என்ற கோவில் யானைக்கு நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்டு தேரோட்டத்துக்கு முன்பாக பாகன்கள் அழைத்து வந்தனர். இதனை பார்த்த ஊட்டி நகர போலீஸ் அதிகாரிகள் யானையை தேரோட்டத்தில் பயன்படுத்த வனத்துறையிடம் அனுமதிபெறப்பட்டு உள்ளதா? என்று கோவில் நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு, கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவில் தேரோட்டத்துக்காக யானை கொண்டு வரப்பட உள்ளது என்று வனத்துறைக்கு கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆனால், வனத்துறை அனுமதி இல்லாமல் ஊர்வலத்தில் யானையை பயன்படுத்த அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் யானை இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முடியாது என்று கோவிலின் முன்பகுதியில் திரண்டு நின்றனர். இதனால் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் நிர்வாகிகளிடம் பேசினார். பின்னர் அவர் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அனுமதி பெறும்படி கோவில் நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த தகவலின் பேரில், கால்நடை மருத்துவ உதவி இயக்குனர்கள் சுகுமார், ராஜன் ஆகியோர் கோவிலுக்கு வந்து யானையை பார்வையிட்டனர். பின்னர் கேரள அரசு மருத்துவர்களிடம் வாங்கப்பட்ட யானைக் கான மருத்துவ சான்றை அவர்கள் சரிபார்த்தனர். அதனை தொடர்ந்து வனத்துறை உதவி வனபாதுகாவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், வனவர் பரமசிவம் மற்றும் வனஊழியர்கள் யானையை பார்வையிட்டு பாகன்களிடம் விசாரித்தனர். கால்நடை மருத்துவ உதவியாளரும் சம்பவ இடத்திற்கு வந்தார்.
இதையடுத்து வனத்துறை அனுமதி அளித்ததால், மதியம் 12 மணிக்கு கோவிலில் இருந்து திருத்தேர் புறப்பட்டது.