நாகப்பட்டினத்தில் தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்!
ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றாத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக மீட்க வலியுறுத்தியும் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஆர்ப் பாட்டம் செய்வதற்காக பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் பொதுச் செயலாளர் அய்யப்பன் முன்னிலையிலும், நாகை மாவட்ட தலைவர் கோபி மற்றும் பா.ம.க.வினர் சுமார் 10-க்கும் மேற்பட்ட கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் நாகை பழைய பஸ் நிலையம் அருகே சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்திரிநாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஆர்ப் பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதனால் போலீ சாருக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ம.க.வினர் பழைய பஸ் நிலையம் அருகில் நின்று போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிவிட்டு, பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.