மதுரைக்கு வருமா மெட்ரோ ரயில்! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பயன் கிடைக்குமா ?
மத்திய அரசின் சிறப்புத் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கிடையே, மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சாத்தியமான வழித்தடத்தை போக்குவரத்து வல்லுனர் குழு அரசுக்கு யோசனையாக அளித்துள்ளது. அதிலுள்ள உத்தேச வழித்தடங்கள் வருமாறு: மெட்ரோ ரயில் பாதை மேலூரில் தொடங்கி, ஐகோர்ட் கிளை, எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், வடக்கு வெளிவீதி, பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம், திருநகர், தோப்பூர் வழியாக திருமங்கலம் வரை அமைக்க வாய்ப்பு உள்ளது.
தேவைப்பட்டால் விமான நிலையத்துக்கும் நீடிக்கலாம். மதுரை நகரின் அகன்ற வீதிகளில் மேம்பாலம் கட்டி அதன் மேல்தளத்திலும், தேவையான இடங்களில் சுரங்கப்பாதையிலும் மெட்ரோ தண்டவாளம் அமைத்துக் கொள்ளலாம். இந்த வழித்தடங்களில் சென்னையைப் போல் படிப்படியாக பாதை அமைத்து நிறைவேற்றலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மதுரை மாநகர் எல்லை 148 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிவடைந்துள்ளது. மக்கள் தொகை 18 லட்சத்தை தாண்டியது. வெளியூர் மக்கள் தினமும் 3 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
மாநகராட்சி எல்கை மேலும் விரிவடைய வாய்ப்புள்ளது. மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது. மாநகரில் தற்போதுள்ள வீதிகளை விஸ்தரிக்க வாய்ப்பில்லை. முக்கிய வீதிகள் அனைத்தும் ஒருவழி பாதையாகி விட்டன. ஆனாலும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. இந்த நெரிசலில் இருந்து மீள மெட்ரோ ரயில் திட்டமே தீர்வாக இருக்கும். மதுரை ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், மெட்ரோ ரயில் கனவு மோனோவை போல் கலையாது என்று நம்புகிறோம்” என்றனர்.
source: dinasuvadu.com