துரை அருகே வங்கியில் தீ விபத்து!
மதுரை அருகே பேரையூரில் பஸ் நிலையம் எதிரே தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மாலை பணி முடிந்ததும், ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாலை 4.50 மணியளவில் வங்கியின் உள்ளே தீப்பிடித்து கரும்புகை வெளியே வருவதாக பொதுமக்கள் பேரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ் தலைமையில் போலீசாரும், டி.கல்லுப்பட்டி தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து, வங்கியின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அதைத்தொடர்ந்து வங்கியின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வங்கியின் உள்ளே சென்று பார்த்த போது காசாளர் அறை முற்றிலும் எரிந்து நாசமாயிருந்தது. மேலும் அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் சேதமடைந்து, மின்இணைப்புகள் முற்றிலும் எரிந்து நாசமானது. வங்கியின் தளவாடப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி நாசமாகியிருந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், தீப்பிடித்து எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். ரூ.40 லட்சம் உள்பட 22 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பொருட்கள் தீ விபத்தில் இருந்து தப்பியது என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தினால் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை பேரையூர் பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வங்கியிலிருந்த நகை மற்றும் பணம் சேதமடையவில்லை என்று தெரியவந்ததும் ஆறுதலோடு சென்றனர். இதுகுறித்து பேரையூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.