மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தீவிபத்து நடந்த பகுதியில் அமைச்சர்கள் ஆய்வு!
அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தீவிபத்து நடந்த மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் ஆய்வு நடத்தினர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மீனாட்சி அம்மனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தீ விபத்து நடந்த கிழக்கு சுவாமி சன்னதி வாயிலை தவிர்த்து அனைத்து வாயில்கள் வழியாக பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலிலும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்து நடந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், இந்துசமய அறநிலையத்துறையினர், தொல்பொருள்துறையினர், தடயவியல் துறையினர் ஆய்வு நடத்தினர். அதீத வெப்பத்தின் காரணமாக ஆயிரங்கால் மண்டபத்தில் சில இடங்களில் விரிசல் விழுந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மறுத்துள்ளார். வீர வசந்தராயர் மண்டபத்தில் மட்டுமே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சீரமைக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்துசமய அறநிலையத்துறையினரின் அலட்சியத்தாலேயே தீவிபத்து நடந்துள்ளதாகவும், கோவிலுக்குள் உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக் கோரியும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து ஆலய பாதுகாப்பு குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கிழக்கு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். இதனால் இருதரப்பிற்குமிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே தீவிபத்து நடந்த மதுரை மீனாட்சியம்மன் ஆலய வளாகத்தில் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். தீவிபத்தால் பாதிப்புக்குள்ளான வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், பாதிப்புகள், அதனை சீர்செய்யும் வழிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேவூர் ராமசந்திரன் விபத்து தொடர்பாக விசாரிக்க ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.