டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்! மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!
அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி டாஸ்மாக் மதுக்கடையை திறந்து வைத்திருந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.
மதுரையில் டாஸ்மாக் பணியாளர்கள், விற்பனையாளர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி டாஸ்மாக் மதுக்கடையை திறந்து வைத்திருந்த புகாரில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, மதுரை மேலூர் கச்சிராயன்பட்டி டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வம், கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று விற்பனையாளர் பால்ராஜ், பாண்டி ஆகியோரையும் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், டாஸ்மாக் கடைகளை அரசு நிர்ணயித்த நேரத்தில் திறந்து மூடாவிடில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில், டாஸ்மாக் கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சார் வெளியிட்டிருந்தார்.
அதில், டாஸ்மாக் மற்றும் மது கூடங்கள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூட வேண்டும். எவ்வித விதிமீறல்கள் இருக்க கூடாது. விதி மீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.