மதுரை பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு!
பாலமேட்டில் ஆயிரத்து 2 காளைகளும் ஆயிரத்து 188 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். முதலில் கொண்டு வரப்பட்ட 5 கோவில் காளைகளுக்கு அமைச்சர் உதயகுமார் தங்கக் காசு பரிசு வழங்கினார். இதனைத் தொடர்ந்து போட்டிக் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அணி அணியாக காளைகளும் மாடுபிடி வீரர்களும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கபபட்டனர்.
முதல் அணியில் 55 காளைகளும் இரண்டாவது அணியில் 70 காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகளின் கொம்பை பிடித்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக சிலர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணியிலும் சிறப்பாக மாடு பிடித்த 5 மாடுபிடி வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றனர். மாடுகள் முட்டி காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை ஒட்டி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன…