மதுரை- தூத்துக்குடி சுங்கசாவடிக்கு ரூ.100 கோடி அபராதம்..!தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி செலுத்த மறுப்பு …!

Default Image

தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்பியின் மதுகான் நிறுவனத்துக்கு தூத்துக்குடி மற்றும் மதுரையில் சுங்கசாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வரும் நிலையில்  100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி நாமா நாகேஸ்வர ராவின் மதுக்கான் நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு மதுரை தூத்துக்குடி பைபாஸ் சாலைப்பணியை ஒப்பந்தம் எடுத்தது. 2009ல் பயன்பாட்டு வரவேண்டிய சாலை 2011 ல் தான் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சாலை பணிகள் முடிவடையும் முன்பாகவே தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம், மற்றும் மதுரை எளியார்பதி ஆகிய இரு இடங்களில் மதுகான் நிறுவனம் சுங்கச்சாவடி அமைத்து 11 ஆண்டுகளாக சுங்க கட்டணம் வசூலித்து வருகின்றது.

தெலுங்கு தேச முன்னாள் எம்.பி. ராமா நாகேஸ்வர ராவின் உறவினர் மதுமலம்பட்டி என்பவரின் நேரடி மேற்பார்வையில் இரு சுங்கசாவடிகளும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

மதுகான் நிறுவனம் இந்த சாலைக்கு 163 கோடியே 63 லட்சம் ரூபாயை சுய முதலீடாகவும், ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்து கடனாக பெற்ற 614 கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தம் 777 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் இந்த சாலையை அமைத்துள்ளதாக கணக்கு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்திய முதலீட்டு மற்றும் மதிப்பீட்டு கழக அறிக்கையில் இதன் மதிப்பு 562 கோடியே 31 லட்சம் மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு ஆயிரக்கணக்கில் லாரிகள் சரக்கு ஏற்ற வரும் சுங்ககட்டணம் மூலம் பணத்தை அள்ளி விடலாம் என்ற கனவுடன் போடப்பட்ட சாலை திட்டத்தில் ஏற்பட்ட கால தாமதத்தாலும், லாரிகளின் வருகை குறைந்ததாலும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மொத்தம் 20 ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக சுங்கம் வசூலித்துவரும் மதுக்கான் நிறுவனம் இதுவரை சாலையை பராமரிக்கவில்லை குறிப்பாக ஸ்டெர்லைட் அருகே உள்ள பைபாஸ் சாலை மரண குழிகளாக காட்சி அளிப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.

அதன் அடிப்படையில் கடந்த இரு ஆண்டுகளாக சாலையில் எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாமல் சுங்க கட்டணம் மட்டும் வசூலித்து வரும் மதுக்கான் நிறுவனத்துக்கு முதலில் எச்சரிக்கை நோட்டீசும், அதன் தொடர்ச்சியாக சில கோடிகள் அபராதமும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் விதிக்கப்பட்டது.

இது நாள் வரை சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளததால் அபராத தொகை அதிகரித்து தற்போது 100 கோடி ரூபாயை எட்டி உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அபராத தொகையை செலுத்த மறுத்துள்ள தெலுங்கு தேச முன்னாள் எம்.பி ராமா நாகேஸ்வரராவின் மதுகான் நிறுவனம், சாலை பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையமே இந்த சுங்கச்சாவடியை கையகப்படுத்தி பராமரிக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதன் முதல் கட்டமாக சாலையை சீரமைக்க 280 கோடி ரூபாய்க்கு மதுரை – தூத்துக்குடி பைபாஸ் சாலை சீரமைப்பு பணிக்கு டெண்டர் விட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மதுகான் நிறுவனத்திடம் இருந்து 100 கோடி ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இந்த சாலையின் சீரமைப்பு பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவாக மேற்கொண்டு வாகன ஓட்டிகளின் இன்னல் தீர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்