பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தேவாங்கர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜனிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை!
தேவாங்கர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜனிடம் , பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து பேராசிரியை நிர்மலா தேவி வற்புறுத்திய ஆடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலாதேவி மீது வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கை அருப்புக்கோட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை அருப்புக்கோட்டை போலீசார் நேற்று விசாரணை அதிகாரியும் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யுமான ராஜேஸ்வரி, உதவி விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து வழக்குப் பதிந்துள்ள மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி எஸ்.பி ராஜேஸ்வரி, துணைக் கண்காணிப்பாளர் முத்து சங்கரலிங்கம் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். இந்நிலையில் இன்று தேவாங்கர் கல்லூரி முதல்வர் பாண்டியராஜனிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி ரஜேஸ்வரி தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.