கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : சிவராமன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு.!
கிருஷ்ணகிரி : பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியிருந்த முன்னாள் அரசியல் பிரமுகர் சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று இரவு அவரது தந்தை அசோக்குமாரும் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 5 நாட்கள் போலி என்.சி.சி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த போலி என்.சி.சி முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவியை, சிவராமன் எனும் போலி என்.சி.சி பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமையில் செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையில் அளித்த புகாரின் பெயரில் முக்கிய குற்றவாளியான சிவராமன், இந்த சம்பவத்தை மறைக்க முயற்சித்த பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 11 பேர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடுத்ததடுத்து கைதாகினர்.
முக்கிய குற்றவாளியான சிவராமனை போலீசார் தேடி வந்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அதிகாலை கோவையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர் என தகவல் வெளியாகியது. கைது செய்ய முற்படும் போது சிவராமன் ஒரு இடத்தில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் .
மருத்துவமனை சோதனையின் போது, சிவராமன், தற்கொலைக்கு முயன்று “எலி பேஸ்ட்” சாப்பிட்டது தெரியவந்தது. பின்னர், சிவராமனுக்கு மேல் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சிவராமன் உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னதாகவே, நேற்று இரவு 11.30 மணியளவில் சிவராமன் தந்தை அசோக்குமார் , காவேரிப்பட்டினம் அருகே மதுபோதையில் நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபட்டதில் உயிரிழந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கைதாகி இருந்த முக்கியக் குற்றவாளி உயிரிழந்த பின்னர் இந்த வழக்கின் விசாரணை போக்கு எப்படி இருக்கும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை மேற்கொள்ள பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும், சமூக நலத்துறை செயலாளர் தலைமையில் பல்நோக்கு குழுவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.