கிருஷ்ணகிரியில் ஜி.கே.வாசன் பேச்சு ! தனிக்கட்சி ஆட்சி என்பது இனி கேள்விக்குறிதான்?

Default Image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று ஒரு திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மாலையில் தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த மாதம் 28-ந்தேதி, கிருஷ்ணகிரியில் வேலூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வட்டார, நகர, தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்திற்கு, மத்தியஅரசு அதிககவனம் செலுத்தவேண்டும். தமிழகஅரசு, மக்களின் எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்க தவறுகிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் பணியாற்ற வேண்டும் என்று பொதுவாழ்க்கைக்கு வரும் பிரபலங்களுக்கு யாரும் தடையாக இருக்கமுடியாது. வாக்காளர்கள்தான் எஜமானர்கள். இப்போது தனிக்கட்சிக்கு வாக்களிப்பதை விட கூட்டணிக்குதான் மக்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி என்பது இனிமேல் மிகப்பெரிய கேள்விக்குறிதான். மிகப்பெரிய கட்சிகள், மக்கள் நம்பிக்கையை பெற்ற கட்சிகள், நல்ல கட்சிகள் கூட்டணியில் இருந்தால், அந்த கூட்டணிக்கு வாக்குகள் வரும் வாய்ப்புள்ளது. இதுதான் உண்மை நிலை.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்த விசாரணையின் உண்மைநிலை, காலம் தாழ்த்தாமல் வெளியில் வரவேண்டும் என்பதே த.மா.கா.வின் வேண்டுகோள். தமிழக விவசாயிகளை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம், மத்தியஅரசு மற்றும் கர்நாடக அரசுக்கு இல்லை. மனிதாபிமானம் இல்லாத அரசாக, கர்நாடகஅரசு உள்ளது. மத்தியஅரசு மற்றும் கர்நாடகஅரசின் இந்த போக்கு, கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்புடையதல்ல. ஏற்கனவே மத்தியஅரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
ஜி.எஸ்.டி.வரிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவருவது காலத்தின் கட்டாயம். இதனை மத்தியஅரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று த.மா.கா. கேட்டுக்கொள்கிறது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தியும், உள்ளாட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், த.மா.கா. சார்பில் வருகிற 29-ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது.
த.மா.கா. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. தனித்தன்மையுடன் நாங்கள், எங்கள் இயக்க பணிகளை செய்துவருகிறோம். தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது, மக்களின் மனநிலை, தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் நிலையில் ஆலோசனை செய்யப்பட்டு, அதன்பிறகே அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும். ஓசூரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை விரைந்து ஏற்படுத்தவேண்டும். ஓசூர் பஸ்நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் பஸ்வசதியை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
அப்போது, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞர் பிரிவு தலைவர் யுவராஜா, அமைப்பு செயலாளர் சிவானந்தம், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் காசிலிங்கம், தசரதன், ஜெயப்பிரகாஷ், கே.ஜி.பிரகாஷ், கேசவரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்