கன்னியாகுமரியில் நிவாரண பணிகளுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும்!
ஒக்கி புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒக்கி புயல் பாதித்து 21 நாட்களான நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பாமல், ஸ்தம்பித்திருப்பதாக கூறியுள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற முதலமைச்சர் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், இன்று கன்னியாகுமரி வரும் பிரதமர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமாறு, கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்க முதலமைச்சரும் வலியுறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
source: dinasuvadu .com