அருமனை,
கன்னியகுயமரி மாவட்டம் அருமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சட்ட விழிப்புணர்வு மன்ற தொடக்க விழா நடந்தது. இவ்விழாவுக்கு சார்பு நீதிபதியும், குழித்துறை வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான பத்மா தலைமை தாங்கினார். நீதிபதி பத்மா, விழிப்புணர்வு மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
சட்டம் ஒரு குழந்தையை கருவில் இருந்தே பாதுகாக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கூறுவதும், அதை கேட்பதும் குற்றம். குழந்தைகளை கடத்தல், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்களுக்கு கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சட்ட பாதுகாப்பு வழங்குகிறது.
மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே அடிப்படை சட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது, ஹெல்மெட் அணிவது, சாலை பாதுகாப்பு போன்ற சட்டங்களை தெரிந்து இருக்க வேண்டும். இதன்மூலம் சிறு வயதில் குற்றங்கள் செய்யாமல் வாழலாம்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் பள்ளி மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
DINASUVADU