” மாணவி விபத்தில் பலி ” வாகனங்கள் கண்ணாடி உடைப்பு..!!
கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அருகே இன்று காலை மணல் லாரி மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 7 லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவரது மனைவி கண்மணி. ஊரப்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் கண்மணி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சரண்யா (எ) சூலமெட்டி சேரன், கிருபா (19) என்ற 2 மகள்கள். இவர் கிண்டியில் உள்ள கல்லூரியில் பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் ஆதனூரில் இருந்து ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சைக்கிளில் வந்து, அங்கிருந்து ரயில் மூலம் கல்லூரிக்கு செல்வார்.
இன்று காலை 7.30 மணியளவில் வழக்கம்போல், ஆதனூரில் இருந்து சரண்யா சைக்கிளில் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். மண்ணிவாக்கம், அண்ணாநகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த டாரஸ் லாரி சரண்யா சைக்கிள் மீது வேகமாக மோதியது.இதில் சரண்யா சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு, லாரி சக்கரத்துக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், டாரஸ் லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கி, லாரி டிரைவரை சரமாரியாகத் தாக்கி, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, அங்கிருந்த ஓட்டேரி போலீசார் பொதுமக்களை சமரசப்படுத்தினர். பின்னர், மாணவி சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அவ்வழியாக லாரி வந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், 6க்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
DINASUVADU