திண்டுக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் அதிகமான வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, 5ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2, டிப்ளமோ, ஐ.டி.ஐ, கணினி தகுதி, ஓட்டுநர் தகுதி உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை உடையவர்கள் கலந்து கொண்டு தனியார்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம்.
மேலும், இம்முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவும் நடைபெறும். அயல்நாட்டில் வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளும், சுயவேலைவாய்ப்பு கடனுதவி திட்டங்கள் குறித்தும், கடனுதவி வசதிகள் குறித்தும் வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
எனவே, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அதிக ளவில் பங்கு கொண்டு, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம். இதில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சி தலைவர் விசாகன் தெரிவித்துள்ளார்.