பட்டொளி வீசி பறக்கும் 100 அடி உயரக் கொடி… கம்பீரமாய் தொடங்கிய ‘முத்தமிழ் முருகன் மாநாடு’.!
திண்டுக்கல் : அறநிலையத்துறை சார்பில் இன்றும் (ஆகஸ்ட் 24) நாளையும் (ஆகஸ்ட் 25) பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகன் புகழை போற்றும் விதமாக “முத்தமிழ் முருகன் மாநாடு” எனும் நிகழ்வு தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி உள்ளது.
இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடக்கி வைத்து உரையாற்றினார். முருகன் மாநாடு விழாவிற்காக மாநாடு நிகழ்வு நடைபெறும் வளாக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாடு கொடியை ஏற்றி வைத்தார். உடன் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, ஐ.பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த 2 நாள் மாநாட்டில் முருகன் புகழ் பேசும் ஆன்மீக கண்காட்சி, ஆன்மீக சொற்பொழிவு, கருத்தரங்கம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள், ஆன்மீக மடாதிபதிகள் என பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.