நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒரே கிராமத்தில் அம்மை நோய் பாதிப்பு…!
ஒரே கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மருத்துவக்குழுவை அனுப்பி சிகிச்சையளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள நல்லம்மநாயக்கன்பட்டி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுவாக வெயில்காலம் தொடங்கும் போது, வெப்பநிலை மாறுபாட்டால் சின்னம்மை எனும் அம்மை நோய் பாதிப்பு ஏற்படும். இதே போன்றுதான் நல்லம்மநாயக்கன் பட்டி கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெருக்களெங்கும் வீடுகளில் சின்னம்மை பாதிப்புக்கு ஆளானவர் இருப்பதற்கு அறிகுறியாக வேப்பிலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. ஒன்றரை மாதங்களுக்கு மேல் அம்மை நோய் பரவி வரும் நிலையில் சுக, துக்க நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க இயலாமல் கிராமமே களையிழந்து காணப்படுகிறது.
சுகாதாரத்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கிராம மக்கள் தாங்களே கை வைத்தியம் மூலம் குணப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் கொடுப்பது, சிறிய வெங்காய மாலை அணிவிப்பது, வேப்பிலை தலையணை வைத்துக் கொள்வது என நாட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நோயை தீர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். தேர்வெழுத வேண்டிய பள்ளிக்குழந்தைகள் உட்பட கிராமமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவசரத்திற்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனை கூட அருகில் இல்லாத நிலையில், கிராமத்திற்குள்ளேயே நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் முடங்கிக் கிடக்கின்றனர். கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்தாததால் தெய்வக்குற்றம் ஏற்பட்டுள்ளது என்ற நம்பிக்கையிலும் சிலர் உள்ளனர். சின்னம்மைக்கு நாட்டுவைத்தியம் பலனளிகக் கூடியதுதான் என்ற போதிலும், நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவக்குழுவை அனுப்பி வைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நல்லம்மநாயக்கன்பட்டி கிராம மக்களின் கோரிக்கை..
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.