தொடங்குகிறது தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்..!!
தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான ஆண்டு இறுதி பயிற்சி முகாம் கோவையில் ஞாயிறன்று துவங்குகிறது.
இதுகுறித்து தேசிய மாணவர் படை முகாமின் மக்கள் தொடர்பு அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் கூறுகையில், கோவை தமிழ்நாடு பீரங்கி தேசிய மாணவர் படை பிரிவு சார்பாக தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் அக்.21 முதல் அக்.30 வரை சிங்காநல்லூர் ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெறுகிறது. கர்ணல் சம்சீர் சிங் தலைமையில் நடைபெறும் இம்முகாமில் கோவை அரசு கலைக்கல்லூரி, பிஎஸ்ஜி கலைகல்லூரி உள்ளிட்ட 5 கல்லூரிகள், புலியகுளம் புனிதஅந்தோணியார் உயர்நிலைப்பள்ளி, செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளி, உள்ளிட்ட 16 பள்ளிகளை சேர்ந்த 500 தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்த உள்ளனர். இம்முகாமில் ரத்தானம், மழைநீர் சேகரிப்பு, சாலை பாதுகாப்பு ஆகியவன குறித்த விழிப்புணர்வு, மரம் நடும் விழா, கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் ஆகியவையும், தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு போன்ற நிகழ்வுகளும் நடைபெற இருக்கிறது. மாணவர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, வரைபடம் குறித்த பயிற்சி, கல்லூரி மாணவர்களுக்கு இராணுவத்தில் சேர்வதற்கன பயிற்சிகள் இம்முகாமில் கொடுக்கப்பட இருக்கிறது. முகாமின் நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
DINASUVADU