கோவையில் கருத்தரங்கு நடத்த நீதிமன்றம் அனுமதி..!!
கோவையில் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட மதநல்லிணக்கம் கருத்தரங்கிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் ஒற்றுமை மேடை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி 2.10.2018 அன்று நடைபெறவுள்ள மதநல்லிணக்க கருத்தரங்க நிகழ்ச்சிக்கு கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சிவானந்தா சாலையில் ஆக்டோபர் 2 அன்று மாலை நடைபெறும் கருத்தரங்கிற்கு காவல்துறை விதித்த தடையை நீக்கி, கருத்தரங்கம் நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மனதார வரவேற்கிறது.
கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் திட்டமிட்டபடி செவ்வாயன்று (02.10.2018) கோவை சிவானந்தா சாலையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
DINASUVADU