” யமஹா தொழிலாளர்கள் கைது” CITU கண்டனம் ..!!
சென்னை;
யமஹா நிறுவனத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை கைது செய்யும் தமிழக காவல்துறைக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை அடுத்துள்ள திருப்பெரும்புதூர் பகுதியில் இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிட் எனும் ஜப்பான் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கென ஒரு தொழிற்சங்கத்தை அமைத்தனர். இதை ஏற்க மறுத்த யமஹா நிர்வாகம் சங்க நிர்வாகிகள் இரண்டு பேரை வேலைநீக்கம் செய்தது. இதனை கண்டித்து செப்டம்பர் 21 முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் அனைத்து தொழிலாளர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்சனையில் தொழிலாளர் துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் நிர்வாகம் என அனைத்து அரசு தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டு சென்று தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 26 புதனன்று தொழிலாளர் தனி துணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நிறுவன வளாகத்துக்குள் நுழைந்து அமைதியான முறையில் உள்ள தொழிலாளர்களை பலவந்தப்படுத்தி கைது செய்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை சிஐடியு தமிழ் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தொழிலாளர் பிரச்சனைகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்ற பொது வழிகாட்டுதலை தமிழ்நாடு காவல்துறை அப்பட்டமாக மீறி முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வது தொழிலமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும்.சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களில் இந்திய தொழிலாளர் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதும், சங்கம் அமைக்கும் உரிமையை மறுப்பதும் போன்ற பிரச்சனைகளில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருவதே தொழிலாளர்கள் போராட்டத்தை கையில் எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்பிரச்சனையில் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் தலையீட்டை தடுத்து நிறுத்திடவும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்கவும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
DINASUVADU