தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 : ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள்.. 68,000 கோடி முதலீடுகள்.!
சென்னை : தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். இன்று மொத்தம் 68,773 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஜனவரியில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த மாநாட்டில் மொத்தமாக சுமார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அடுத்து தமிழகத்தில் புதியதாக மேற்கொள்ளப்பட்டுள்ள 19 தொழில்துறை திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளன. மேலும், 28 புதிய தொழில்துறை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ளது.
இன்று சென்னை ராஜா அண்ணாமலை நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழநாடு முதலீட்டு மாநாடு 2024 நடைபெற உள்ளது . இந்த நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாநாடு குறித்து தமிழ்நாடு தொழித்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், ” இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் 19 முடிவுற்ற தொழில்துறை திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதன் முதலீடு மதிப்பீடு மொத்தம் 17,616 கோடி ரூபாய் ஆகும்.
மேலும் , 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கொண்ட 28 புதிய தொழில்துறை திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தமாக 68,773 கோடி ரூபாய் முதலீடு மூலம் தமிழ்நாட்டில் புதியதாக சுமார் 1 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.” என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.