அதிகாலையில் என்கவுண்டர்.! ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில்…
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, இன்று சென்னை வியாசர்பாடி அருகே அதிகாலையில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் உயிரிழந்தார்.
சென்னை : 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக உள்ள பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று சென்னை வியாசர்பாடி அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த பாலாஜி, பிரபல ரவுடிகளின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார்.
கடந்த 2009இல் ரவுடி சதீஸ் கொலை வழக்கு உட்பட ரவுடி பில்லா சுரேஷ், ரவுடி விஜி, ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா என சென்னையில் பல்வேறு முக்கிய ரவுடிகளின் கொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாக காக்கா தோப்பு பாலாஜி இருந்துள்ளார். இவர் மீது கொலை வழக்கு, ஆட்கடத்தல், கொலை முயற்சி என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள BSNL குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது காக்கா தோப்பு பாலாஜி சிக்கியுள்ளார்.
அப்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார் பாலாஜி. பின்னர், தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி பாலாஜி சுட்ட போது, தற்காப்புக்காக காவல்துறையினர் பாலாஜியை நோக்கி சுட்டுள்ளனர். இதில் காவல்துறையினர் சுட்டதில் பாலாஜியின் நெஞ்சில் குண்டு பாய்ந்துள்ளது.
பின்னர், மயங்கி விழுந்த பாலாஜியை காவல்துறையினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், இவரது உடல், கூறாய்வு பணிக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. பின்னர், ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் சென்னை ராயப்பேட்டை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டது.
பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.