தனியாக செல்லும் பெண்களின் செயின் பறிக்கும் நிலை மாறி தற்போது கணவருடன் செல்லும்போது, அதுவும் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள இடத்திலேயே நகை பறிக்கப்பட்டு வருவது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அரும்பாக்கம், குன்றத்தூரில் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அரும்பாக்கத்தில் நகை வராததால் பெண்ணை செயின் பறிப்புக் கொள்ளையர்கள் சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் பார்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
அதன் விபரம் வருமாறு: சென்னை வண்ணாரப்பேட்டை யைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா (50). அந்தமானில் உள்ள இவர்களது உறவினர்கள் வீட்டு திருமணம், விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.
இவரது உறவினர்கள் பல ஆண்டுகளாக அந்தமானில் இருப்பதால் திருமணம் தொடர்பான முழு விபரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. இதனால், திருமண நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக சில தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக உறவினரான மேனகாவை அழைத்துள்ளனர்.
இளைஞர்கள் இருவர் நோட்டம்
அதன்படி, மேனகா நேற்று காலை 7.30 மணிக்கு அரும்பாக்கம் வள்ளலார் நகர், பாஞ்சாலியம்மன் கோயில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பைக்கில் வந்த இளைஞர்கள் 2 பேர் நோட்டம் விட்டனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் மேனகா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்கச் செயினைப் பறித்தனர்.
செயின் உடனே கையோடு வராததால் மேனகாவை. சாலையில் அவர்கள் கொடூரமாக இழுத்துச் சென்றனர். இதனால், மேனகா நிலைகுலைந்தார். எவ்வளவோ போராடியும் நகையைக் காப்பாற்ற முடியாத விரக்தியில் சாலையோரம் அமர்ந்து கதறி அழுதார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து, மேனகா கூறும்போது, “சிறுகச் சிறுக பணம் சேர்த்து வாங்கிய நகை. அனைத்தும் மொத்தமாக பறிபோய் விட்டது. உயிர் போனாலும் பரவாயில்லை என நினைத்து நகையைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது” என கதறி அழுதார். செயின் பறிப்பு குறித்து அரும்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இதோ அந்த மனதை பறிக்கும் காட்சி…..