ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் : சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்த பெற்றோர்.!
ஒன்றரை வயது குழந்தை கை இழந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பெற்றோர் தஸ்தகிர் – அஜீஷா தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜீஷா தம்பதியின் ஒன்றரை வயது மகன் முகமது மஹீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையின் போதே சில காரணங்களால் கை அழுகியதன் காரணமாக சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்டது.
அரசு மருத்துவமனை செவிலியர்களின் அலட்சியத்தால் மட்டுமே இந்த பாதிப்பை ஏற்பட்டது என குழந்தையின் தாய் புகார் கூறினார். இது தொடர்பாக மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு விசாரித்து வருவதாகவும் குழந்தைக்கு எதனால் இவ்வாறு ஆயிற்று என்பது தெரிந்துவிடும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், விசாரணைக்கு ஆஜராகும்படி குழந்தையின் பெற்றோருக்கும் விசாரணை குழு சம்மன் அனுப்பி உள்ளது. இந்நிலையில் சென்னை காவல் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். அதில் செவிலியர்களின் அலட்சியத்தால் தாங்களது குழந்தையின் கை பறிபோய் உள்ளது என்றும் ,ஆதலால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.