முதல்வர் உத்தரவு.. மழைநீர் குறித்த ஆய்வு.! அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி.!
சென்னையில் அதிக மழைபெய்தும் பெரிய அளவில் பாதிப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
வளிமண்டல மேல்அடுத்து சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் அது உடனடியாக மாநகராட்சி ஊழியர்களால் வெளியியேற்றப்பட்டது. தற்போது மழைநீர் தேங்கிய பகுதிகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை சைதாப்பேட்டையில் அவர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், 1950 க்கு பிறகு ஜூன் மாதத்தில் பெய்த இரண்டாவது மிகப்பெரிய மழை அளவானது இதுவாகும். தற்போது வரை 16 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மழை நீர் வடிகால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதனால் 700 கோடி ரூபாய் மதிப்பில் 700 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெரும் அளவில் மழைநீர் எங்கும் தேங்காாமல் தவிர்க்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அதிகளவு மழைபெய்தும் பெரிய அளவு பாதிப்பில்லை எனவும், மழை பெய்த 90 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார் . அடுத்ததாக, நேற்று நான் திருவாரூரில் உள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தேன்.
பின்னர், முதல்வர் என்னிடம் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம். நீங்கள் சென்று மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்யுங்கள் என கூறினார். அதனை தொடர்ந்து தற்போது இங்கு ஆய்வு செய்து வருகிறேன் என குறிப்பிட்டார்.