சென்னை:கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார்.
அமெரிக்கப் பயணத்தை முடிந்துவிட்டு நாடு திரும்பிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு,அதன்பின்னர் லேசான இருமல் இருந்ததையடுத்து,பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது.இதனைத் தொடர்ந்து,நவம்பர் 22 ஆம் தேதியன்று அவர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து,கொரோனா பாதிப்பால் சிசிக்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன் உடல் நிலை சீராக உள்ளதாக நவ.26 ஆம் தேதியன்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை கடந்த டிச.1 ஆம் தேதியன்று தெரிவித்தது.மேலும்,டிசம்பர் 4 முதல் தனது வழக்கமான வேலையைத் தொடர அவர் தகுதியுடையவராக இருப்பார் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து,மருத்துவமனையிலிருந்து டிஸ்சார் ஆகி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடு திரும்பியுள்ளார்.இதனைத் தொடர்ந்து,தனக்காக வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும்,முதல்வருக்கும்,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலருக்கும் உளப்பூர்வமான நன்றிகள் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்;என்னுயிரே…என்னுறவே… என் தமிழே…
மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்குத் திரும்பினேன். நலமாக இருக்கிறேன். என்னை தன் சொந்த சகோதரன் போல கவனித்து சிகிச்சையளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி தலைமையிலான மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், என்னிரு மகள்களுக்கும், ஊண் உறக்கம் இன்றி உடனிருந்து கவனித்துக்கொண்ட என் அணியினருக்கும், தம்பி மகேந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் விரைந்து நலம்பெற வேண்டுமென வாழ்த்திய இனிய நண்பர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அருமை நண்பர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், புதுவை முன்னாள் முதல்வர் திரு நாராயணசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் என் நன்றிகள்.
என் ஆரூயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அன்புச் சகோதரர் இசைஞானி இளையராஜா, மாறாத பிரியம் வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இனிய நண்பர்கள் சத்யராஜ், சரத்குமார், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட திரைத்துறை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் என் நன்றிகள்.
என்னுடைய விடுப்பை திறம்பட சமாளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கும், விக்ரம் திரைப்படக் குழுவினருக்கும், பிக்பாஸ் அணியினருக்கும், விஜய் தொலைக்காட்சி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
நான் விரைந்து குணமடைய வேண்டுமென ஆலயங்களில், தேவாலயங்களில், மசூதிகளில் பூஜைகள், பிரார்த்தனைகள், தொழுகைகள் நடத்தியும், நேர்த்திக்கடன்கள் செய்தும், அன்ன தானம், இரத்த தானம் உள்ளிட்ட நற்பணிகளிலும் ஈடுபட்ட என்னுடைய ரசிகர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், என்னை தன் வீட்டில் ஒருவனாகக் கருதி எனக்காக கண்கலங்கி தங்கள் பிரார்த்தனையில் எனக்காகவும் வேண்டிக்கொண்ட லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
பிரார்த்தனைகளுக்குப் பலன் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் அன்பின் வலிமையை அறிந்தவன் நான். உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னைக் கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி. உதவிய உள்ளங்களுக்கு நன்றி எனக்காகக் கலங்கிய கண்களுக்கு நன்றி தொழுத கரங்களுக்கு நன்றி. என் பொருட்டு ஓடிய கால்களுக்கு நன்றி. உன்னத உறவுகளைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி”,என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…