சென்னையில் மகனை காப்பாற்ற கால் டாக்சி ஓட்டுநரிடம் கட்டப் பஞ்சாயத்து செய்த பெண் ஆய்வாளர்!
தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவர், தனது குடும்பத்துடன் சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து கால் டாக்சி ஓட்டி வருகிறார். கடந்த 24 -ம் தேதி அன்று வாடிக்கையாளர் அழைப்பிற்காக அபிராமபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த மற்றொரு கார் பலமாக மோதியது. வங்கி கடன் பெற்று வாங்கிய தனது கார் சேதமடைந்ததால் அதிர்ச்சியடைந்த மைக்கேல் ராஜ் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த விபத்தை ஏற்படுத்திய தன்ஷீர், தனது நண்பர்களை செல்போனில் அழைக்க, நேரில் வந்த 4 பேர் கால் டாக்சி ஓட்டுநர் மைக்கேல் ராஜை கடுமையாக தாக்கினர். அதில் சுரேஷ் என்ற நபர் தனது தந்தை காவல்துறை உயர் அதிகாரி என்றும், புகார் கொடுத்தால் சென்னையில் எந்த பகுதியிலும் நிம்மதியாக வாழ முடியாது என மிரட்டியதால் மைக்கேல்ராஜ் பயந்துபோனார்.
காயமடைந்த மைக்கேல் ராஜ், மிரட்டலையும் மீறி அபிராமபுரத்தில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகார் கொடுத்து 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட பாதிக்கப்பட்டவர் கமிஷனர் அலுவலகம் சென்ற பிறகே விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர் அபிராமபுரம் போலீசார். ஆனால் தாக்குதல் நடத்திய தனது மகன் சுரேஷ் மீது வழக்குப் பதிய கூடாது என கூறி தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயலஷ்மி, அபிராமபுரம் காவல் நிலையத்திற்கே நேரில் வந்து கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளார். விசாரணைக்கு வந்த மைக்கேல் ராஜை காவல் நிலையத்தில் வைத்து, ஆய்வாளர் ஜெயலெஷ்மி மிரட்டியதாகவும் கூறுகிறார் பாதிக்கப்பட்ட மைக்கேல் ராஜ்.
இந்த விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திய தன்சீர் மீது மட்டும் வழக்கு பதிந்துள்ள அபிராமபுரம் போலீசார், தன்னை மயிலாப்பூர் உதவி ஆணையரின் மகன் என கூறிக் கொண்டு அட்டகாசம் செய்த ஆய்வாளர் ஜெயலெஷ்மியின் மகன் சுரேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது
மைக்கேல்ராஜை மிரட்டிய சுரேஷ், சில மாதங்களுக்கு முன் மயிலாப்பூர் பகுதியில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அடையார் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை வசம் நிலுவையில் உள்ளது. காவல் துறையை சேர்ந்தவராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க தயங்காத சென்னை காவல் ஆணையர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியோடு மட்டுமல்லாமல் வேறொரு காவல் நிலையத்திலேயே வந்து கட்டப்பஞ்சாயத்து செய்த ஆய்வாளர் ஜெயலெஷ்மி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
source: dinasuvadu.com