தமிழக அமைச்சரவை மாற்றமா.? எனக்கே தகவல் இல்லை.., முதலமைச்சர் ‘பளீச்’ பதில்.!
சென்னை : தமிழக அமைச்சரவை மாற்றம் பற்றி தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். 17 நாட்கள் அமெரிக்கப் பயணத்தில் பல்வேறு பன்னாட்டு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது. 17 நாட்கள் அமெரிக்க பயணத்திற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமென செய்திகள் வெளியாகின.
மேலும், இன்று காலை முதல் வெளியான தகவல்கள் அடிப்படையில், தமிழக அமைச்சரவையில் 2 மூத்த அமைச்சர்கள் உட்பட 3 அமைச்சர்களின் துறைகள் வேறு புதிய எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றும், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கூட அளிக்கப்படலாம் அல்லது முதலமைச்சர் கவனித்து வரும் சில துறைகள் அவரிடம் கொடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
இப்படியான சூழலில் தான், இன்று தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியது. இதனையும் குறிப்பிட்டு , அமைச்சரவை மாற்றத்திற்கு ஒப்புதல் வாங்குவதற்காக தான் இந்த சந்திப்பு நிகழ உள்ளது எனவும் கூறப்பட்டது.
இன்று தலைமை செயலகத்தில் பல்வேறு திட்ட நிகழ்வுகளை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கையில், செய்தியாளர்கள் அவரிடம், அமைச்சரவை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “அமைச்சரவை மாற்றம் பற்றி எனக்கே தகவல் தெரியவில்லை” என சிரித்துக்கொண்டே பதிலளித்து சென்றார்.
அமைச்சரவை மாற்றம் என்றும், ஆளுநர் – தலைமை செயலாளர் சந்திப்பு என்றும் செய்திகள் வெளியாகி வரும் வேளையில் முதலமைச்சரின் இந்த பதில் சற்று ஏமாற்றத்தையும், குழப்பத்தையும் அளித்துள்ளது.