சென்னையில் தொழிலதிபரை கொலை செய்த கார் ஓட்டுநர் கொலை! போலீசார் கைது …..
சென்னையில் தொழிலதிபரை கொலை செய்த கார் ஓட்டுநர் கூலிப்படையினரால் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், கொலை செய்ய கூலிப்படையினரை ஏவி விட்ட தொழிலதிபரின் சகோதரர் உள்ளிட்ட 8 பேரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர்.
ஈக்காட்டுதாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்த உதயபாலன் என்பவர் திருமுடிவாக்கத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கு ஆலையை நடத்தி வந்தார்.
இவர் கடந்த ஐந்தாம் தேதி தமது வீட்டு படுக்கையறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த வழக்கு கிண்டி போலீசாரிடம் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்ட போது, இந்த வழக்கில் அதிரடியாக உதயபாலனின் மனைவி உதயலேகா கைது செய்யப்பட்டார். முன்னதாக கைது செய்யப்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநர் பிரபாகரனுடன், உதயலேகாவுக்கு தகாத உறவு இருந்ததே கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 10 ஆம் தேதி அவர் ஜாமீனில் வருவதாக அறிந்த உதயபாலனின் தம்பி வசந்த், அண்ணனின் கொலைக்கு பழிவாங்க துடித்தார். ஈக்காட்டுதாங்கலில் உள்ள கூலிப்படை தலைவன் ஆறுமுகம் என்பவரை சந்தித்த வசந்த், பிரபாகரனை தீர்த்துக் கட்ட வேண்டும் என 5 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளார். 3 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்ற பின்னர் பிரபாகரனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் ஆறுமுகம். பிரபாகரனுக்கு ஆறுமுகம் நன்கு தெரிந்தவர் என்பதால் அவரது திட்டம் எளிதானது.
கடந்த 18ஆம் தேதி பிரபாகரனை அழைத்துக் கொண்டு கொரட்டூரில் உள்ள கெனால் சந்திப்பு அருகே மதுகுடித்துக் கொண்டிருந்த ஆறுமுகம், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். இந்த வழக்கில் உதயபாலனின் தம்பி வசந்த், ஆறுமுகம் உள்பட 8 பேரை கொரட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
source: dinasuvadu.com