கோவைக்கு ஓர் நல்ல செய்தியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.! வானதி சீனிவாசன் பேட்டி.!
சென்னை : கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்துள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சந்தித்து, அவரின் தொகுதி மேம்பாட்டு பணிகள் பற்றியும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தார். அது பற்றி செய்தியாளிடம் பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார்.
வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கோவை மட்டுமல்லாது ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவையாக இருந்து வந்த கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து இன்று முதலமைச்சரை சந்தித்து பேசினோம். கோவை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்த விமான நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி தரவேண்டும். அது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது.
ஒரு வழியாக தற்போது விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தேவைப்படும் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு உரிய நில இழப்பீடு தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டுமென்றால் அது மத்திய அரசு அதிகாரத்தின் கீழ் வரும். மற்றபடி, தனியார் நிறுவனம் ஒரு விமான நிலையத்தை மேம்படுத்த நினைத்தால், அப்போது மாநில அரசை அதில் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொள்ளும்.
கோவை விமான நிலையத்தை மத்திய அரசு விரைவுப்படுத்த உள்ளதால், தமிழக அரசு அதனை தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தது. இப்படியான சூழலில் தற்போது கோவைக்கு ஒரு நல்ல செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். எந்தவித நிபந்தனையுமின்றி கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தேவையான நிலங்களை மத்திய அரசுக்கு அளிக்க தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்பதை தற்போது முதலமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார். மாநில அரசின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்த பின்பு 1000 கோடி ரூபாய் செலவில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் ஊட்டி, ஈஷா யோகா மையம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மற்ற தொழில்துறை சேர்ந்தவர்கள் மாணவர்கள் என பலரும் பயன்பெறுவார்கள். ” என்று கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கியது குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.