திமுக – பாஜக ரகசிய ஒப்பந்தம்.? கலைஞர் சிலை முதல் நாணயம் வரை.., காரணங்களை அடுக்கிய அதிமுக.!
சென்னை : திமுக – பாஜக இடையே ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தான் நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு கடந்த ஞாயிற்று கிழமையன்று கலைஞர் பெயரில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் என பலர் கலந்து கொண்டனர். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பாஜக மற்றும் திமுக தலைவர்கள் ஒரே மேடையில் கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டனர்.
இந்த நிகழ்வு குறித்து அதிமுக தொடர்ச்சியாக தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஏற்கனவே, திமுக – பாஜக ரகசிய கூட்டணி வைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் விமர்சனம் செய்திருந்த நிலையில், இன்று சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு திமுக – பாஜக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், “திமுக – பாஜக இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது இப்போது அல்ல. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னர் ஒருமுறை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினாரே அப்போதே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது. அதனை அடுத்து கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு வெங்கையா நாயுடு (பாஜக) வந்திருந்தார். கூட்டணியில் உள்ள சோனியா காந்தியை (காங்கிரஸ்) திமுக அழைக்கவில்லை .
தேர்தல் சமயத்தில் கூட பாஜக, அதிமுகவை குறிவைத்து தான் பிரச்சாரம் செய்தனர். அண்ணாமலை பேசும் போது கூட அதிமுக தலைவர்களின் பெருமைகளை சீர்குலைக்கும் விதமாக தான் பேசினார். திமுகவை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்யவில்லை. ஆளுநரிடம் , அண்ணாமலை DMK Files எனும் திமுக அமைச்சர்கள் செய்த ஊழல் என ஒரு பட்டியலை அளித்தார். ஆனால் அதுபற்றி அடுத்த நடவடிக்கை எடுக்க கூறி ஆளுநருக்கு அண்ணாமலை அழுத்தம் கொடுக்கவில்லை.
திமுக கூட்டணியில் 39 எம்பிக்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அவர்கள் அளித்த பார்ட்டியில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார். அண்மையில் நடைபெற்ற நாணயம் வெளியீட்டு விழாவானது விக்ரமன் படம் போல குடும்ப பாசம் நிறைந்த விழாவாக தான் இருந்தது. பாஜக – திமுக அண்ணன் தம்பியாக ஒட்டி உறவாடினார்கள். எப்போதும் கருப்பு பேண்ட் அணியும் முதலமைச்சர் அன்று சந்தன கலர் பேண்ட் அணிந்து செல்கிறார்.
பாஜகவின் கொத்தடிமையாக திமுக மாறி வருகிறது. முதலமைச்சர் பேச்சில் தடுமாற்றம் இருக்கிறது. “நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா” என முதல்வர் கூறுகிறார். அடுத்து, “எங்கள் அழைப்பை ஏற்று வந்த ராஜ்நாத் சிங்கிற்கு நன்றி.” என கூறுகிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள். முதலமைச்சரின் நடவடிக்கைகள் தோழமை கட்சிகளுக்கே வெறுப்பு உண்டாகும்படி இருக்கிறது. ” என்று அதிமுக முன்னர் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.