பிரதமர் நரேந்திர மோடி ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார்…!
பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் அருகே ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, இன்று வருவதை ஒட்டி, ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த திருவிடந்தையில் 14ஆம் தேதி வரை பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 268 ஏக்கர் பரப்பளவில் சுமார் 670 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியில் 47 நாடுகளின் ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியா சார்பில் டாடா, எல் அண்ட் டி, மஹிந்திரா, டி.ஆர்.டி.ஓ, எச்.ஏ.எல்., பி.இ.எல். உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.
இந்த கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 9.20 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி, கார் மூலம் கண்காட்சி மைதானத்திற்கு செல்கிறார். பாதுகாப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமான திறந்து வைத்து முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார். நண்பகல் 12 மணியளவில் மாமல்லபுரத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்கி, தற்காலிக சாலையின் வழியே கேன்சர் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்புகிறார். பின்னர், பிற்பகல் 2 மணியளவில் விமான நிலையத்திலிருந்து அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமரின் வருகையை ஒட்டி, சென்னையில் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், சென்னை விமான நிலையம், மாமல்லபுரம், திருவிடந்தை, ஐ.ஐ.டி வளாகம், அடையார் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கத்திப்பாரா சந்திப்பு, ஆலந்தூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்கிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.