பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழகத்தில் என்ன வேலை? இங்கு ஏன் வருகிறீர்கள்?ஆத்திரமடைந்த வைகோ ….
சென்னை சின்னமலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து தடையை மீறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பலுான்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மதிமுக சார்பில் நடந்த இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சமூக ஒற்றுமையை கட்டிக்காக்கும் தமிழகத்தில் பஞ்சத்தை தலைவிரித்தாடவைக்க மத்திய அரசு திட்டமிடுவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலாண்மை வாரியம் அமைக்காமலும், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கான நீதியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழிதோண்டி புதைக்க பின்புலமாக இருந்தவரும் பிரதமர் மோடி தான். தஞ்சை மக்களை பசியால் வாடவைத்து எத்தியோப்பியாவை போல ஆக்க நினைக்கும் மோடி, நன்செய் நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்று, மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி தமிழர்களை ஒழித்துவிடலாம் என நினைக்கிறார்.
தமிழ்நாட்டை கைப்பற்றிவிடலாம் என்ற மோடியின் நினைப்பு ஒருபோதும் நிறைவேறாது. காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் பிரதிநிதியான முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்காத பிரதமர் மோடிக்கு, தமிழகத்தில் என்ன வேலை? இங்கு ஏன் வருகிறீர்கள்? என ஆவேசமாக வைகோ கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.