சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் என்று சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் முழு விபரம் :
கொள்ளையன் மணீஷ்குமார் யாதவ் ஹீரோ ஹோண்டா பேஷன் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக அடையாறு இந்தியன் வங்கியில் கொள்ளையடித்து ஓடி விரைந்தான். பணப்பையை வாகனத்தின் முன்பக்கத்தில் வைத்திருந்த அவன், கையில் ஒரு துப்பாக்கி, கால்சட்டைப் பையில் ஒன்று என இரு நாட்டுத்துப்பாக்கிகளுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றான். வங்கியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அடையாறு வாட்டர் டேங்க் சிக்னல் அருகே சென்ற போது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததால் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
வங்கி வாடிக்கையாளர்கள் சிலர் துரத்தியதால் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மணீஷ்குமார் சிக்னலில் நின்றிருந்த வாகனம் ஒன்றின் மீது மோதி விட்டான். மோதிய வேகத்தில் விசையை தவறுதாலாக அழுத்தியதால் துப்பாக்கி வெடித்தது. துப்பாக்கி சத்தத்தை கேட்டதும் சிக்னலில் நின்றிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதனிடையே சிக்னல் அருகே நின்றிருந்த போலீஸார் துப்பாக்கிச்சூடு சத்தத்தையும், ஒருவன் தப்பி ஓடுவதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அடையாறு போக்குவரத்து ஆய்வாளர் ஜோசப், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் கையில் துப்பாக்கியுடன் நின்ற மணீஷ்குமாரை மடக்கிப் பிடித்து அவனிடமிருந்து 6 லட்ச ரூபாய் பணம் மற்றும் இரு நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
போலீஸாரிடம் பிடிபட்ட மணீஷ்குமார் யாதவை அடையாறு காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டது. போக்குவரத்து காவல் தெற்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் துணிச்சலுடன் செயல்பட்ட போக்குவரத்து காவலர் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
வங்கி வாடிக்கையாளர் மோகன்ராஜ் மற்றும் போக்குவரத்து காவலர்களின் துணிச்சல் மிகுந்த செயல்பாட்டால் வங்கிக்கொள்ளையன் 500 மீட்டர் தூரத்தை கடப்பதற்குள் காவலர்களிடம் பிடிபட்டுள்ளான். பட்டப்பகலில் சென்னையின் முக்கிய பகுதியில் நிகழ்ந்த சினிமாவை விஞ்சும் சம்பவங்களால் அடையாறு பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் மணீஷ் குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் என்று சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.