சென்னையில் நீண்ட தூர பேருந்துகள் நிறுத்தம்-தமிழக அரசின் வசூல் வேட்டை
பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்களை மிக கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கும் தமிழக அரசு. தற்போது 300 மாநகர பேருந்துகளை குறுகிய தூர வழிதடங்களாக மாற்றி மறைமுக வசூல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இதுவரை இயங்கி வந்த 300 நெடுந்தூர போக்குவரத்து சேவைகளை நிறுத்தி குறைந்த தூர வழித்தடமாக அரசு போக்குவரத்து கழகம் மாற்றியிருக்கிறது. இதுவரை ஒரே பேருந்தில் சென்று வந்த இடங்களுக்கு தற்போது 2 அல்லது 3 பேருந்துகளை பிடித்து செல்லவேண்டிய நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல பயணிகளிடமிருந்து பேருந்து கட்டணத்துடன் சேர்த்து விபத்து மற்றும் சுங்க வரியும் வசூலிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. சாதாரண பேருந்தில் ஒரு ரூபாயும், குளிர்சாதன பேருந்தில் 2 ரூபாயும் கேட்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.