எதிர்க்கட்சியினர் சாலை மறியல் எதிரொலி …! சென்னை முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு …!
சென்னை முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சாலை மறியலை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடியுடன் மெரினாவில் உள்ள அண்ணாநினைவிடம் நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.
இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.
காவிரி உரிமைகளைப் பெறுவதில் அரசியல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறி ஸ்டாலின் அழைப்பை ஏற்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்தும் முழு அடைப்புக்கு பாமக, கொமதேக, லதிமுக, மஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு போராட்டத்தில் குதித்துள்ளது.
அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம் நடத்தி வருகிறது. சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மறியல் செய்து வருகின்றன.
சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையே ஸ்தம்பித்தது. சென்னையின் முக்கிய சாலையை முடக்கியதால் போக்குவரத்து முடங்கியது. இந்த மறியலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் கலந்துகொண்டனர்.
பின்னர் போலீசாரின் தடையை மீறி பேரணியாக சென்றவர்கள், மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் சென்னை முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.