மது போதையில் ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார்!

வாடகைக்கு குடி இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் மது அருந்திவிட்டு அதிக சத்தத்துடன் பாடல்கள் போட்டு ரகளை செய்வதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் மகனும் பிரபலமான தமிழ் திரையுலகின் நடிகருமாகிய விஷ்ணு விஷால் சென்னை கூந்தன்குளத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு வாங்கி தங்கி இருக்கிறார். கடந்த 4 மாதங்களாக இந்த இடத்தில் குடியிருக்க கூடிய விஷ்ணு விஷால் வந்த நாள் முதற்கொண்டு தற்பொழுது வரையிலும் திரைப்படத்துறையில் பயன்படுத்தக்கூடிய ஆடியோ கருவியை வைத்து இரவு நேரத்தில் சத்தமாக ஆடியோ போட்டுவிட்டு மது அருந்திவிட்டு முன்பின் தெரியாதவர்களை வீட்டிற்கு அழைத்து ரகளை செய்வதாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணைக்காக விஷ்ணுவிஷால் குடியிருக்க கூடிய அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசார் வந்துள்ளனர். அங்கு வந்து விசாரணை மேற்கொண்ட பொழுதும் விஷ்ணு விஷால் எனது தந்தை ஓய்வு பெற்ற அதிகாரி என்பதால் நீங்கள் வந்து என்னிடம் இவ்வாறு விசாரணை நடத்துகிறீர்களா எனவும்,  மேலும் புகார் அளித்த நபர்களுடன் வாக்குவாதத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார். இது குறித்து பேசிய வீட்டின் உரிமையாளர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை எனவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீட்டின் உரிமையாளரும் போலீசில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.