MurungaiKeerai Sambar : அட முருங்கை கீரையை வச்சி சாம்பார் வைக்கலாமா..? வாங்க பார்க்கலாம்..!

இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் எந்த மரம் இல்லையென்றாலும், முருங்கை மரம் காணப்படும். இந்த முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே நாம் பயன்படுத்தக்கூடியது ஆகும். முருங்கை மரத்தின் இலை, தண்டு, வேர், பூ, காய் என அனைத்திலுமே வைட்டமின்கள, தாதுக்கள், ஆண்டிஆக்சிடென்ட்கள் என பல சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில், முருங்கை கீரையை வைத்து சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • துவரம்பருப்பு – 100 கிராம்
  • பூண்டு – 20 பல்
  • பெருங்காய தூள் – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • முருங்கை கீரை- 10 கொத்து
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • கடுகு – 1 ஸ்பூன்
  •  சீரகம் – அரை ஸ்பூன்
  • வரமிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தக்காளி – 2
  • குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • புளி – சிறிதளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாம்பாரை தயார் செய்வதற்கு முன்பதாகவே துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு குக்கரில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பு, பூண்டு ஐந்து பல், பெருங்காயத்தூள் சிறிதளவு, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி நான்கு விசிலுக்கு நன்கு பருப்பை அவிய விட வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், வரமிளகாய், பூண்டு, தக்காளி, கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அவை பொன்னிறமாக வதங்கிய பின்பு அதனுள் குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டும். சேர்த்து நன்கு கிளறிட வேண்டும்.

அதன் பின் பருப்பு அவித்த பின் வடித்து வைத்துள்ள தண்ணீரை சிறிதளவு சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். பின்பு சின்ன நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து ஊற்ற வேண்டும். அதன் பின்பு நன்கு கிளறிவிட்டு அவித்து வைத்துள்ள பருப்பு கலவையை அதற்குள் சேர்த்து மேலும் நன்கு கிளற வேண்டும். அதனை  மூன்று முதல் நான்கு நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதன் பின் உருவி வைத்துள்ள முருங்கை கீரையை சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் முருங்கைக்கீரையின் நிறம் மாறுபடும். எனவே ஒரு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, குழந்தைகள் மருத்துவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடியது ஆகும்.

முருங்கை கீரையின் பயன்கள் :

முருங்கை கீரையில், வைட்டமின்கள்  A, C, B1, B2, B3, B6, K, இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், குளோரோஜெனிக் அமிலம், கேடசின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. முருங்கை கீரையை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. முருங்கை கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.