மிக்ஜாம் புயல் நிவாரணம்: வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடக்கம்!

மிக்ஜாம் புயல் நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

மிக்ஜாம் புயல் – கனமழை காரணமாக சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்ட பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்தது.

அதில் குறிப்பாக ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா ரூ.6000 நிவாரண உதவித்தொகை வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தலா 6000 ரூபாய் பெரும்பாலும் வழங்கப்பட்ட நிலையில், ரேஷன் கார்டு இல்லாமல் சென்னை சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கும் நிவாரண உதவிதொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டு இருந்தது. அதன்படி, சென்னையில் வசிப்போர் இதுவரை 4.9 லட்சம் பேரும், காஞ்சிபுரத்தில் 29 ஆயிரம் பேரும், செங்கல்பட்டில் 14 ஆயிரம் பேரும் , திருவள்ளூரில் 22 ஆயிரம் பேரும் என மொத்தமாக 5.5 லட்சம் பேர் ரேஷன் கார்டு இல்லாமல் நிவாரண தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

ரூ.6000 நிவாரணம்.! ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்.!

இந்நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரண நிதி பெறுவதற்கு விண்ணப்பித்த ரேஷன் கார்டு இல்லாதவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான செயலி மூலம் விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆய்வு பணி முடிந்த பிறகு இவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது.