மேக்ஸ்வெல் அதிரடி சதம்.. த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன்டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கேப்டன் சூர்யா குமார் யாதவ், தொடக்க வீரர் ருதுராஜ் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர்.  நிதானமாக விளையாடிய சூர்யா குமார் யாதவ் 29 பந்தில் 39 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் ருதுராஜ் சிறப்பாக விளையாடி சதம் விளாசி    57 பந்தில் 123* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அதில் 13 பவுண்டரி, 7 சிக்ஸர் அடங்கும்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். 223 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி இருவரும் களமிறங்கினர். 5 ஓவரில் ஆரோன் ஹார்டி 16 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் வந்த வேகத்தில்  10 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய ஆரோன் ஹார்டி 35 ரன்கள் எடுத்த போது ரவி பிஷ்னோயிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார்.

இதனால் ஆஸ்திரேலியா அணி 68 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. பின்னர் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் இருவரும் கூட்டணி அமைத்து விளையாடினர். ஒருபுறம் மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபுறம் ஸ்டோனிஸ் நிதானமாக விளையாடி வந்தார். இருப்பினும் 17 ரன்னில் மார்கஸ் ஸ்டோனிஸ்  விக்கெட்டை இழக்க அடுத்து வந்த டிம் டேவிட் டக்அவுட் ஆகி வெளியேறினார்.

ஆனால் களத்தில் விளையாடி வந்த மேக்ஸ்வெல் சதம் விளாசி 48 பந்தில் 8 பவுண்டரி, 8 சிக்ஸர் என மொத்தம் 104* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று ஆஸ்திரேலியா வெற்றி பெற வழிவகுத்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் இந்திய அணி  2 போட்டியில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னியில் உள்ளது.

author avatar
murugan