மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார்.!

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் வீழ்ந்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.

நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவிய தொகுதியாக மாறியது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தான், இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட்டனர்.

இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனும், மயூரா ஜெயக்குமாரும் மாறி மாறி முன்னிலை வகித்தது வந்த நிலையில், இதன்பின் வானதி சீனிவாசன் மற்றும் கமல்ஹாசன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோவை தெற்கு தொகுதியின் இறுதிக்கட்ட சுற்றின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், மநீம முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 52,526 வாக்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 51,087 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இவரை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் 41,669 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக அம்மன் கே. அர்ஜுனன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடவில்லை அதற்க்கு பதிலாக தங்களது கூட்டணி கட்சிகளுக்கே வாய்ப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்