களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? இபிஎஸ்-க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? இபிஎஸ்-க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

makkal needhi maiam

மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? என மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஒடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

மக்கள் நீதி மய்யமும், அதன் தொண்டர்களும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் களப்பணியாற்றி வருகின்றனர். தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்களின் மேற்பார்வையில் மக்களை சந்தித்து, நிவாரணப் பொருட்களையும், தேவைப்படும் உதவிகளையும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், மழை தொடங்குவதற்கு முன்னரே தலைமறைவான எடப்பாடி, பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்து, மக்கள் தொண்டு புரிபவரை விமர்சிக்கிறார்.

மிக்ஜாம் புயல்… பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழக முதல்வரும், மாநில அரசும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாத, யாரையும் விமர்சிக்கத் தகுதியே இல்லாதவர், தன்னலமின்றிப் பணிபுரிவோரை குறைகூறுவதை பொதுமக்கள் மட்டுமல்ல, அவர்கள் கட்சியினரே ஏற்க மாட்டார்கள்.

2015-ம் ஆண்டில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தபோது, தமிழகத்தை ஆண்ட முதல்வர் எங்கே இருக்கிறார், எந்த நிலைமையில் இருக்கிறார் என்றே மக்களுக்குத் தெரியாத நிலை இருந்தது. அப்போதும் இவர்கள் யாரும் களத்தில் இல்லை, இப்போதும் மக்களுடன் இல்லை. பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாமல், கூவத்தூரில் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை மக்களுக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கும் தலைவரைப் பற்றி விமர்சிக்கத் தகுதி உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய பாஜக அரசின் அடிவருடியாகச் செயல்பட்டு, மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவந்ததுடன், சிறுபான்மையினரைப் பாதிக்கும் சட்டங்களுக்கு கையெழுத்திட்டுவிட்டு, இப்போது திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டதாக நாடகம்போடும் இவர், தனது கொள்கையில் மாறாமல் இருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவரை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம். இனியும் ஏதாவது பேசினால், இவர் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம் என கூறியுள்ளார்.

Join our channel google news Youtube