பால் இருந்தா போதும் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்யலாம்..!
Ice cream-வீட்டிலேயே வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- பால் =அரை லிட்டர்
- சர்க்கரை =கால் கப்
- சோளமாவு =2 ஸ்பூன்
- வெண்ணிலா எசென்ஸ் அல்லது ஏலக்காய் தூள் =1/2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பாலை கொதிக்க வைக்கவும் பிறகு சோள மாவுடன் சிறிதளவு பால் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொதிக்கும் பாலில் சேர்த்து கிளறவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். கைவிடாமல் கிளறினால் தான் கட்டியாகாமல் இருக்கும்.
மேலும் மாவு அதிகமாக சேர்க்கக்கூடாது, சேர்த்தால் ஐஸ்கிரீம் சுவையாக இருக்காது. பால் ஓரளவுக்கு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறிவிட்டு கொதிக்க விடவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து வெண்ணிலா எசன்ஸ் அல்லது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.
பால் நன்றாக ஆறியவுடன் அதை மிக்ஸியில் அடித்து மூன்று மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு திரும்பவும் எடுத்து மறுபடியும் மிக்ஸியில் அடிக்கவும் அப்போதுதான் ஐஸ்கிரீம் மிருதுவாக இருக்கும். அதை மீண்டும் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் ஐஸ்கிரீம் தயாராகிவிடும்.
ஐஸ்கிரீமை எடுக்கும் கரண்டியை சுடு தண்ணீரில் நனைத்து பிறகு ஐஸ்கிரீமை எடுத்தால் எடுப்பதற்கு சுலபமாக வரும்.
எனவே குழந்தைகளுக்கு நம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் ஐஸ்கிரீம்களை செய்து கொடுக்கலாம்.