உலக இதய தினம் 2024.. இதய ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்..!
இதய ஆரோக்கியத்திற்கான பொறுப்பை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே உலக இதய தினம் கடைபிடிப்பதற்கான நோக்கம்.
Use Heart for Action” என்ற முன்மொழிதலை முன்நிறுத்தி இந்த ஆண்டிற்கான உலக இதய தினம் 2024 கடைபிடிக்கப்படுகிறது. இதய ஆரோக்கியத்திற்கான பொறுப்பை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே உலக இதய தினம் கடைபிடிப்பதற்கான நோக்கம்.
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி சர்வதேச இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்றும் இதய நோய் பற்றிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்த வேண்டியும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இதய நோய் வருவதற்கான முக்கிய காரணங்கள் என்ன? அதில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இதய நோய் வர காரணங்கள் ;
கருவறை முதல் ஓய்வின்றி உழைக்கும் ஓர் உறுப்பு இதயம். இதய ஆரோக்கியத்தை வைத்து தான் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், வாழ்வியல் மற்றும் உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சமீப காலமாக மாரடைப்பு, இதய வாழ்வு சுருக்கம் உள்ளிட்ட பல்வேறு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக சைலன்ட் அட்டேக் எனும் மாரடைப்பு வயது வரம்பின்றி ஏராளமான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது என்றே கூறலாம்.
அது மட்டுமல்லாமல் ஆண்களை விட பெண்கள் தான் மூன்று மடங்கு அதிகம் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் தனது ஆய்வு அறிக்கையில் கூறுகின்றது . வேலை பளு மற்றும் குடும்ப பாரத்தை ஒரே நேரத்தில் சுமக்கும் பெண்களுக்கு மன அழுத்தத்தால் இதய நோய் அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் மரபணு காரணமாக குழந்தை பிறக்கும் போதே இதய நோய் கோளாறு வருவதாகக்கூறும் மருத்துவர்கள், இதனால் இதய பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தான் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனக்கூறும் மருத்துவர்கள், இதயம் சார்ந்த நலனில் அக்கறை கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதய நோய் வருவதை தடுக்கும் உணவுகள்;
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எண்ணெய்களை விட நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் நாம் உண்ணும் உணவில் பூண்டு, வால்நட், பாதாம் பருப்பு, அவகேடா , சிவப்பு திராட்சை, தக்காளி ,ஸ்ட்ராபெரி ,ப்ளூபெர்ரி போன்ற பெரி பழங்கள் மற்றும் டார்க் சாக்லேட் , மீன் வகைகள் குறிப்பாக சால்மன் மீன் ,மத்தி மீன், கானாங்கெளுத்தி போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது இதய ஆரோக்கியம் மேம்படும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் மன அழுத்தம் என்பது இதய நோய் ஏற்படுவதற்கான மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது எனக்கூறும் மருத்துவ ஆய்வாளர்கள், மனம் சார்ந்த பிரச்சனைகள் தீர நல்ல தூக்கம், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மனதுக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது, உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செயல்களில் ஈடுபடுவது போன்று அவ்வப்போது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலமும் இதய நோய் வருவது தடுக்கப்படும் எனவும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்;
இதய ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்த சில உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வதும் சில உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதும் அவசியமானது .அந்த வகையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள், மைதா உணவுகள் ,கேஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள் ,உப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை போதிய வரையில் தவிர்ப்பது நல்லது . இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.