நாய்கள் ஊளையிடுவது ஏன்? அறிவியல் ஆச்சரிய தகவல்கள் இதோ..
நாய்கள் ஓநாய் இனத்தில் இருந்து மனிதர்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்தவை. அவ்வபோது அவை தனிமையை உணரும் போது ஊளையிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நாய்கள் ஓநாய் இனத்தில் இருந்து மனிதர்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்தவை. அவ்வபோது அவை தனிமையை உணரும் போது ஊளையிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சென்னை : ஆதிகாலம் முதல் இன்று வரை மனிதனின் சிறந்த செல்ல பிராணியாக, சிலருக்கு நண்பன் போலவும், சிலருக்கு வீட்டில் ஒரு நபர் போலவும் நாய்கள் இருக்கின்றன. விஸ்வாசமுள்ள ஜீவனாக நாய்கள் பார்க்கப்படுகிறது. இவை பொதுவாக பாதுகாப்பு குணம் கொண்டவை, வீடு முதல் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் ராணுவம் வரை சேவையாற்றி வருகின்றன.
2016ல் நடத்தப்பட்ட கன்ஸ்யூமர் இன்சைட் ஆய்வின்படி, பூமியில் வாழும் நாய்கள் ஓநாய் இனத்திலிருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து வீடுகளில் மூன்றில் ஒரு பங்கு வீட்டில் நாய்கள் உள்ளது எனவும், மனிதனின் சிறந்த செல்லப்பிராணி வரிசையில் நாய்கள் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
இந்த நாய்கள் ஏன் இரவில் ஊளையிட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. சில நபர்கள் நாய் ஊளையிடுவதை ஒரு கெட்ட சகுனமாகவும் நம்புகின்றனர். நாய்கள் கெட்ட ஆவியை பார்த்தால் இவ்வாறு சத்தமிடும் எனவும், மரணம் ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை எனவும் மூட நம்பிக்கையை பரப்புகின்றனர்.
இந்து மத ஜோதிடத்தின்படி நாய்கள், முன்னோர்களின் ஆவியை பார்த்து அழுவதாக ஓர் கூற்று உள்ளது. நாய்களின் பார்வை திறன் மற்றும் நினைவாற்றல் அதிகமாக இருப்பதால் ஆவிகளை எளிதில் அடையாளம் காட்டுகின்றது எனவும் சில மூட நம்பிக்கை உலவுகிறது.
விஞ்ஞானம் கூறுவது என்ன.?
நாய்களின் இந்த நடத்தையை கண்டறிய சில விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இந்த ஊளை சத்தம் நாய்கள் ஓநாய்களின் இனம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது என்று கண்டறியப்பட்டது. மேலும், நாய்கள் அதன் தனிமையை உணரும் போதும் இதுபோல் ஊளையிடுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் அன்னியர்கள் வந்தால் அவரை கண்காணிக்கும் படி மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும் இது போல் சத்தமிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மனிதனின் கைவிரல் ரேகை எப்படி ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக உள்ளதோ அதேபோல் நாய்களின் மூக்கின் அச்சு ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்துவமாக இருக்கிறது. நாய்களின் உடல் வெப்பநிலை 101 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 101.2 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்க வேண்டும். ஒருவேளை இதிலிருந்து மாறுபட்டால் அது நாய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நாய்களுக்கு வாசனை உணரும் திறன் மனிதனை விட பத்தாயிரம் மடங்கு அதிகமாக உள்ளது என சொல்லப்படுகிறது.
மனிதர்களை விட நாய்களுக்கு கேட்கும் திறன் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. அதாவது 64 HZ முதல் 23000 HZ வரை ஒலியை கூட கேட்க முடியும். இதேபோல சில வகை நாய்களால் 67 HZ முதல் 45000HZ வரை ஒலியையும் கேட்க முடியும். மேலும் மனிதர்களைப் போல நாய்களுக்கு வயதாக ஆரம்பித்தால் செவித்திறன் குறையும். நாய்களின் கண்களுக்கு கருப்பு வெள்ளை, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் மட்டுமே காண முடியும் என்றும் கூறுகின்றனர். நாய்களுக்கு மொத்தம் 13 வகை ரத்த பிரிவு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நாய்களின் சிறுநீரில் அதிக அளவு ஆசிட் இருப்பதால் சில வகை உலோகத்தை கூட உருகச் செய்யும் தன்மை கொண்டதாம்.
மேலும், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் உள்ள பிணைப்பு ஆக்சிடேஷன் ஹார்மோனால் ஏற்படுகிறது என்றும் விஞானிகள் கூறுகின்றனர். இந்த ஹார்மோன் இரு தரப்பிக்கும் சுரக்கும் பொழுது ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. மனிதர்களுக்காக நாய்கள் அவர்களின் வாழ்நாட்களை கூட தியாகம் செய்யுமாம்.