காய்ச்சல் விரைவில் குணமாக என்ன சாப்பிடலாம் ..?என்ன சாப்பிடக்கூடாது..?
பருவகால சூழ்நிலைகள் மாறும் போது எளிதில் தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
பருவகால சூழ்நிலைகள் மாறும் போது எளிதில் தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவு முறைகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : பருவகாலம் மாறும் சமயத்தில், காய்ச்சல் வந்துவிட்டால் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் சரியான உணவுகளையும் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் காய்ச்சலின் போது உடலில் ஜீரண சக்தி,நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கட்டாயம் உணவு பழக்க வழக்கத்தை அதற்க்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
நிலவேம்பு குடிநீர் ;
எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் நிலவேம்பு கசாயம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், இது நாட்டு மருந்துகளில் சிறந்த மற்றும் எளிதான கண்டுபிடிப்பு என்றே கூறலாம். ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் நிலவேம்பு பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.
பெரியவர்கள் என்றால் கால் டம்ளர் அளவும் ,சிறியவர்களுக்கு கால் டம்ளரை விட குறைவான அளவிலும் எடுத்து கொள்ளலாம். இந்த நிலவேம்பு குடிநீரை பருவகால மாறுதல் சமயத்தில் குடிப்பது சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே நேரம் எந்த ஒரு நோய் தொற்று அறிகுறிகளும் இல்லாத சமயத்தில் நிலவேம்பு கசாயத்தை தினந்தோறும் அதிகளவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இந்த நிலவேம்பு குடிநீரை காலை மாலை என இருவேளையும் எடுத்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் ;
காய்ச்சல் நேரத்தில் எண்ணையில் பொரித்த உணவுகள் ,மற்றும் கிரீம், இனிப்பு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும் .மீன், கறி போன்ற கடினமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதற்கு மாறாக மட்டன் சூப் ,சிக்கன் சூப் ,என திரவ வடிவில் எடுத்து கொள்ளலாம்.
காய்ச்சல் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் ;
காய்ச்சல் நேரத்தில் பலரும் பிஸ்கட், பிரட், கஞ்சி என்ற உணவு முறையை மேற்கொள்வது வழக்கம் தான் .ஆனால் இந்த சமயத்தில் தான் உடலுக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும். அதோடு மட்டுமல்லாமல் எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
கஞ்சி தயார் செய்யும் போது அதனுடன் சிறிதளவு பாசிப்பயிறு அல்லது பாசிப்பருப்பு, சீரகம், மிளகு ,பூண்டு ஆகியவற்றை சேர்த்து கஞ்சியாக தயார் செய்து காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் கட்டாயம் ஒரு முட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். அது நாட்டு கோழி முட்டையாக இருப்பது இன்னும் சிறந்ததாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிறகு காலை 11 மணி அளவில் பாலில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய வேளையில் சாதம், ரசம் மற்றும் இரண்டு வகையான காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாலையில் தேங்காய் நான்கு துண்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவாகும் . இரவில் இட்லி போன்ற ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள கொத்தமல்லி மற்றும் புதினா சட்னி எடுத்துக் கொள்வதோடு ஒரு வேக வைத்த முட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெதுவெதுப்பான தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோல் காய்ச்சல் நேரத்தில் உங்கள் உணவு முறைகளை அமைத்துக் கொண்டால் காய்ச்சல் நீண்ட நாள் வரை நீடிக்காமல் மிக விரைவில் குணமடையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.